கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சூரிய மின் உற்பத்திக்கான சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் 8 மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டு உள்ளது. இது, சோலார் பேனல் வழக்கில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகும்.