கேரளாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருதிவிராஜ் உள்பட பலர் நடித்த சினிமா திரையிடப்பட்டு வருகிறது.
மேலும் கேரள தியேட்டர்களில் தமிழ் திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் படங்களும் அதிகளவில் திரையிடப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்றோர் படங்களுக்கும் மலையாள ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
தற்போது கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர் களில் திரையிடப்படும் மலையாள படங்களை பொறுத்தவரையில் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதி உள்ள 40 சதவீதம் தியேட்டர் அதிபர்களுக்கு செல்லும்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வசூல் தொகையை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை மலையாள பட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஏற்கவில்லை. இதைதொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் இடையே வசூலை பிரிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இதில் தியேட்டர் உரிமையாளர்கள் பிடிவாதமாக தங்களுக்கு வசூல் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கூறியதாலும் அதை தயாரிப்பாளர்கள் ஏற்காததாலும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைதொடர்ந்து தியேட்டர் அதிபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதிய மலையாள திரைப் படங்களையும் திரையிடமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக மோகன்லால், பிருதிவிராஜ், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான சினிமா தொழிலாளர்களும் வேலை இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனால் ஏற்கனவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பழைய மலையாள சினிமாக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சிங்கம்-3 தமிழ் சினிமாவை வெளியிடுவதிலும் மலையாள தியேட்டர் அதிபர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதனால் அதிக தியேட்டர்களில் சிங்கம்-3 கேரளாவில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.