சில முக்கிய அரச நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
மத ரீதியான விடுமுறை தினங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் சில அரச நிறுவனங்கள் சேவையை வழங்க உள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் அரச நிறுவனங்களே இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் திறக்கப்பட உள்ளன.
பொதுமக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் போன்றன முதல் கட்டமாக வாரத்தின் ஆறு நாட்கள் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகள் குறைந்த பட்சம் மாவட்டத்தில் ஒரு வங்கிக் கிளையேனும் மத ரீதியான விடுமுறை நாட்களைத் தவிர்ந்த வருடத்தின் ஏனைய அனைத்து நாட்களும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவின் சேவையை இரவு 10.00 மணி வரையில வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் கம்பனி பதிவுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் போன்றன 24 மணித்தியாலங்களும் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.