அறிக்கை கோருவது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றதாம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கோருவது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனியார் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியினால் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது கள்வனின் தாயிடம் களவு பற்றி மை வெளிச்சம் கேட்டறிந்து கொள்வதற்கு நிகரானதாகும். அந்தக் காலத்தில் ரத்துபஸ்வல பிரதேசத்தில் மக்கள் மீது நான் தாக்கியதாக கூறினார்கள் அவருக்கு இவருக்கு அடித்தது எல்லாம் நான் என்றார்கள்.

எனினும் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்களைத் தாக்கியது படையினர். யார் என்ன சொன்னாலும் மக்களுக்குத் தெரியும் உண்மையான நிலமை என்ன என்பது பற்றி.

“தற்பொழுது எப்படி சுகம் என ஊடகவியலாளர்களிடம் வினவினால் அடி வாங்காமல் இருக்கின்றோம்” என பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எமது அரசாங்கம் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவில்லை.

பயிற்சி வழங்கி வந்தோம் தொழில்களில் நிரந்தரமாக்குவதற்கு திட்டமிட்டிருந்தோம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் வெள்ளை யானை என இந்த அரசாங்கம் கூறுகின்றது. எனினும். கப்பல்கள் தொடர்ச்சியாக வருகின்றன என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.