மைத்திரி பதவியேற்று 2 வருட நிறைவு….!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தைப் படையினர் மீளவும் பாடசாலைச் சமூகத்திடம் விரைவில் ஒப்படைக்கவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவாக இந்தக் கையளிப்பு நடைபெறவுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண தலைமைச் செயலர் ஆகியோருக்கும் ஜனாதிபதியின் செயலருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் போருக்குப் பின்னர் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதனால் பாடசாலை மிக நெருக்கடியின் மத்தியில் இயங்கி வந்தது.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து காணியை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த மாதம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குச் சென்றிருந்தபோதும் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் செயலர் நேற்று மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.