முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! அச்சத்தின் மத்தியில் பெண்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாகக் காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி இதனை தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப்பாதை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பெண் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை. இப்போதும் பல குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.

ஐந்து பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒரு பெண் தலைமைத்துவக் குடும்பம் பாதுகாப்பு அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றது. திட்ட அடிப்படையில் கொடுக்கப்பட்ட வீடுகளும் முழுமையாக முடியாமல் கதவுகள், யன்னல் அமைக்கப்படாமல் காணப்படுகின்றன.

பாதுகாப்புத் தரவேண்டிய பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று வருகின்றபோது பாலியல் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

இரவு வேளைகளில் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்றவுடன் மறிப்பது என்று பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எல்லாம் ஒரு பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவே நாங்கள் உணர்கின்றோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.