“வவுனியா மாவட்டம் ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடி அமைந்துள்ள 20 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலாக இராணுவத்தினருக்கு வேறொரு இடத்தில் 6 ஏக்கர் காணி ஏ – 9 வீதியில் வழங்கப்படவுள்ளது. என வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும் மேலதிக மாவட்டச் செயலருக்கும் இடையில் நேற்று இடம்பெற்றசந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்.
ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 20 ஏக்கர் காணியில் 6 ஏக்கர் காணியை மட்டும்எடுத்து மிகுதிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் வெளியிட்டனர். ஏ – 9 வீதியில் 6 ஏக்கர் நிலம் வேண்டுமே என்று கேட்டனரே தவிர இந்தக் காணிதான் வேண்டும் எனக்கோரவில்லை.
அந்தப் பகுதியில் சுமார் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி உள்ளதாகவும், கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் வசமுள்ள அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த விடயத்தை இராணுவத்தினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அதற்கிணங்கவே இந்த சந்திப்பு மாவட்டச் செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சோதனைச் சாவடி அமைந்திருந்த பிரதேசத்துக்கு அண்மையாக ஒரு நிலம் பாவனை இன்றி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் காணி தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு விவாதித்திருந்தோம்.
அவரின் கருத்துக்கு அமைவாக அது அரச காணி என்றால் அதனைப் படையினருக்கு வழங்கி விட்டு மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.