பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: சித்தராமையா தொடங்கி வைத்தார்!

பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது,

பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரமான நேரங்களில் இது பாதிப்பை உண்டாக்குகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதனால் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. மிக அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறவர்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி விவரங்களை தெரிவிக்கலாம்.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை சாலை மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்து அதன் பிறகு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் மருத்துவர்கள் குழு இருக்கிறது. அவசரமான நேரத்தில் இந்த சேவை மிக முக்கியமானது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இவ்வாறு சித்தராமையா பேசினார்.

அந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்களை அறிமுகம் செய்துள்ளது. ஒரே என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் அவசரமான நேரங்களில் சிகிச்சை அளிக்கக்கூடிய ஐ.சி.யு. வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு என்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒலியும் மற்ற ஹெலிகாப்டர்களை விட குறைவாக இருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறினர்.