சிறப்பு வாய்ந்த ஆன்மிக தகவல்கள்!!

நின்ற கோலத்தில் ஈசன் :

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமான் லிங்க வடிவத்தில்தான் பக்தர்களுக்கு காட்சி தருவார். சிவபெருமான் என்றாலே, அவரது லிங்க வடிவம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் திருவதிகை திருத் தலத்தில் மட்டும் ஈசனை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு, மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக அவரை இங்கு பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

கடைசியாக விநாயகர் வழிபாடு :

பொதுவாக அனைத்து கோவில்களிலும், முதலில் விநாயகருக்கு வழிபாடு செய்து விட்டுத்தான், ஏனைய தெய்வங் களுக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவிலில் முதலில் தட்சிணாமூர்த்திக்குத்தான் வழிபாடு நடத்தப் படுகிறது. கடைசியாகத்தான் விநாயகருக்கு வழிபாடு செய்கிறார்கள். இது எந்த கோவிலிலும் காண முடியாத அதிசய நிகழ்வாகும்.

விஷம் முறிக்கும் நூல் இழை :

நேபாள நாட்டில் ‘கருட யுத்தம்’ என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது வீதி உலா கொண்டு வரப்படும் கருட பகவானின் திருமேனியில் வியர்வைத் துளிகள் துளிர்க்கும். இவற்றை ஒரு துணியில் ஒற்றியெடுத்து நாட்டின் மன்னருக்கு அனுப்புவார்கள். அவ்வாறு அனுப்பப்படும் துணியின் ஒவ்வொரு இழை நூல்களையும் அரச குலத்தினர் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஒருவரை பாம்பு கடித்து விட்டால், அது கடித்த இடத்தில் இந்த நூல் இழையை சுற்றினால் உடனே விஷம் இறங்கி விடும் என்பது அவர்களது நம்பிக்கை.

மகாபாரதம் அருளிய ஐந்து நூல்கள் :

மக்களுக்கு மிகச்சிறந்த போதனைகளை எடுத்துரைத்த மகாபாரதம் சிறப்பு வாய்ந்த நூலாக கருதப்படுகிறது. இந்த மகாபாரதத்தில் ஐந்து உன்னதமான நூல்கள் அடங்கி யுள்ளன. அவை அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதை. கிருஷ்ணர் முன்னிலையில் பீஷ்மர் அருளிய சகஸ்ரநாமம். விதுரர், திருதராஷ்டிரருக்கு வழங்கிய விதுர நிதி, சந்த்ஹீஜாதர், திருதராஷ்டிரருக்கு அருளிய சந்த்ஸிஜாதியம். யட்சர் கேட்ட கேள்விகளுக்கு தருமர் கூறிய பதில்கள் அடங்கிய யட்சபரச்ஞம் ஆகியவை ஆகும்.

சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் :

தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் இருக்கிறது மாவூற்று வேலப்பர் கோவில். முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த ஆலயத்தில் உள்ள மாமரத்தின் கீழ் வற்றாத நீரூற்று, எப்பொழுதும் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. மாமரத்தின் அடியில் இருந்து வரும் ஊற்று காரணமாகவே, இந்த இறைவன் ‘மாவூற்று வேலப்பர்’ என்றும், இந்த தீர்த்தம் ‘மாவூற்று தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆதி வராஹமூர்த்தி :

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள், முதலில் புஷ்கரணி தீர்த்தத்தின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் ஆதி வராஹமூர்த்தியை வணங்கிய பின்னரே, ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு தரிசனம் செய்தால் தான் வெங்கடாஜலபதியை தரிசித்ததற்கான முழு பலன் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது அய்யாவாடி என்ற ஊர். இங்கு தர்மசம்வர்த்தினி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னிதியில் பிரத்யங்கராதேவி அருள்பாலிக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதால் முதலில் ‘ஐவர்பாடி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. தேவியின் சன்னிதியில் அமாவாசை தோறும் ‘நிகும்பலா யாகம்’ நடத்தப்படுகிறது. எதிரிகளை அழிக்கும் சக்தியை அருளும் யாகம் இது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகள் பயம் நீங்கும் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.