உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்!

இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான சர்வதேச ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் என்ற உடல் சார்ந்த குறைபாட்டை இனி பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தொடர்புடையதாகக் கருத முடியாது என்று கூறுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா, தெற்கு ஆசியா மற்றும் சகாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகள் ஆகியவற்றில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில், ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு சரிந்துள்ளதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவித்திருக்கிறது.

குழந்தைப் பருவத்தில் எடுத்துக் கொள்ளப்படும் மோசமான ஊட்டச்சத்து, குறைந்த அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறிக்கும் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.