தான் இயக்கும் படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயக்குனர் மிஷ்கின் வழக்கம். ஏற்கனவே தான் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவை வில்லனாக்கி அழகு பார்த்தார். அந்த வரிசையில் விஷாலை வைத்து தான் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜை வில்லனாக்கியிருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து வந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பாக்யராஜ் ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
விஷாலுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன், ஆண்ட்ரியா இருவரும் நடிக்க முக்கிய வேடங்களில் வினய், பிரசன்னா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ‘துப்பறிவாளன்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.