இங்கிலாந்தில் கிழக்கு மிட்லேண்டஸ் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆருஷ் ஆனந்த். இவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன்.
இவன் நாட்டிங்காம் உயர்நிலைப்பள்ளியில் 3-வது வகுப்பு படிக்கிறான். தற்போது இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக களை கட்டி விட்டது.
அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசுவேண்டும் என எழுதும்படி மாணவர்களிடம் ஆசிரியர் தெரிவித்தார். அதையடுத்து பல மாணவர்கள் தங்களுக்குரிய பரிசுபொருட்களை பட்டியலிட்டு எழுதினர்.
ஆனால் ஆருஷ் ஆனந்த் மட்டும் சிரியாவில் அமைதி நிலவ வேண்டும். கிறிஸ்துமஸ் அன்று சிரியாவிலும் சமாதானம் திகழவேண்டும். அதுவே எனக்கு கிறிஸ்துமஸ் பரிசு” என எழுதியிருந்தான்.
அவனது உருக்கமான இக்கடிதத்தை அவனது ஆசிரியர் ரிச்சர்டு மில்லர் வெளியிட்டார். இதுகுறித்து ஆருஷ் ஆனந்த் கூறும் போது “ சிரியாவில் தொடர்ந்து நடைபெறும் போரினால் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இதே நிலை தான் உள்ளது.
எனக்கு சண்டை பிடிக்கவில்லை. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அணுகுண்டு வீச்சு குறித்தும் அதன் பாதிப்பு குறித்தும் படித்து இருக்கிறேன். அதே போன்று சிறிய அளவிலான இரண்டாம் உலகப்போர் சிரியாவில் நடக்கிறது. எனவே அங்கு தானாக அமைதி திரும்பவேண்டும் என கடிதம் எழுதினேன். நாம் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஏனெனில் நமக்கு உணவு கிடைக்கிறது. இந்த பள்ளியில் படிப்பது எனது அதிர்ஷ்டம். தாயும், தந்தையும் எனக்கு நல்ல கல்வியை அளித்துள்ளனர் என்றான்.