கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி, அவர் மீண்டும் இடைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனை புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி வரும் சபையில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இந்த யோசனை கட்டாயம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு கட்சி மாறும் உரிமை இருக்க வேண்டும் எனவும் கட்சி மாறிய பின்னர், அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு கட்சி மாறியமைக்கான அங்கீகாரத்தை மக்களிடம் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த யோசனை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பின்னர், அது மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
மேலும் புதிய தேர்தல் முறை திருத்தத்தில் இந்த யோசனை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.