தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன் அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினரும் இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் தஜிகிஸ்தான் அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.
அதன்பின்னர் பிரதமர் மோடி, தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ஆகியோர் சந்தித்து இரு தரப்பு உறவுகள், தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பண மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் நிதி புலனாய்வை பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்புக்குப்பிறகு பிரதமர் மோடி, தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய மோடி, ‘இந்தியாவும் தஜிகிஸ்தானும் பல்வேறு பாதுகாப்பு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் என்பது இரு நாடுகளுக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை, ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் வன்முறையை ஏற்படுத்தி நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. எனவே, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.
தஜிகிஸ்தான் அதிபருடனான சந்திப்பானது பொருளாதாரம் மற்றும் வணிக முதலீடுகளை அதிகரிக்க உதவியாக இருக்கும். மத்திய ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையில் தஜிகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக நமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.