தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அ.தி.மு.க. சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க முடிவு செய்தார். இந்த செய்தி வெளியானது முதலே, மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த தி.மு.க.வினர் சிலர் வைகோவுக்கு எதிராக பேசத் தொடங்கினர். வைகோ வந்ததும் இந்த எதிர்ப்பு பூதாகரமாக வெடித்தது.
இன்று இரவு 7.30 மணியளவில் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரது கார் மருத்துவமனையை நெருங்கியபோது தி.மு.க.வினர் காரை மறித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். மேலும், காரை மருத்துவமனைக்கு வராதபடி மறித்து தாக்கத் தொடங்கினர். கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். மேலும், அசம்பாவித சம்பங்கள் நடக்காதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக டி.கே எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் தெரிவித்தனர்.