இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.
சென்னை ஆடுகளம் எதிர்பார்த்த அளவிற்கு பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையிலும் இந்தியாவின் உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆனால், பந்து அவருக்க ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை. இன்றைய 2-வது நாள் ஆட்டத்திற்குப் பின் உமேஷ் யாதவ் சென்னை சேப்பாக் ஆடுகளம் குறித்து கூறுகையில் ‘‘இந்த ஆடுகளத்தில் பந்து வீச மிகக் கடினம்.
ஏனென்றால் பந்து டர்ன் ஆகவே இல்லை. இது கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது. இங்கிலாந்து வீரர்கள் விரைவாக ஓடி சில ரன்களை எடுத்தனர். ஆனால், பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பிரச்சினையால்தான் எங்களால் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியவில்லை. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
மூன்றாவது நாளுக்குப் பின் ஆடுகளம் நன்றாக திரும்பினால் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் சில சுவராஸ்யம் இருக்கலாம்’’ என்றார்.