மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய வெற்றிடத்தை நிரப்புவதற்காக, அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களிலே தமிழக முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இதனால் அதிமுகாவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட வேண்டும் என்று பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் 18 ஆம் திகதி ஜெயலலிதாவின் சமாதியில் மொட்டை அடித்து தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளோம். அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்போம் எனவும் கூறியுள்ளார்.