செல்லா நோட்டுகளை நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெறக்கூடாது: மத்திய நிதி மந்திரி அறிக்கை!!

ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளை நன்கொடையாக பெறக்கூடாது என்று அரசியல் கட்சிகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கேட்டுக்கொண்டு உள்ளார்.

தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறும் வருமானத்துக்கு வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து இருந்தால் அந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று கூறியது. கட்சிகள் பெறும் நன்கொடை ரூ.20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், நன்கொடை கொடுத்தவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை சேகரித்து பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதற்கிடையே, இந்த அறிவிப்பில் குழறுபடி இருப்பதாக கூறி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

வருமான வரி சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட தங்கள் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும். ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிறகு (நவம்பர் 8-ந் தேதிக்கு பிறகு) அந்த நோட்டுகளை அரசியல் கட்சிகள் நன்கொடையாக பெறக்கூடாது. அப்படி எந்த கட்சியாவது நன்கொடை பெற்று இருந்தால் அது சட்டவிரோதமாக கருதப்படும்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும், ‘வரிவிதிப்பு சட்டங்கள் (2-வது திருத்தம்) மசோதா 2016‘ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் அரசியல் கட்சிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

மற்றவர்களைப் போல் அரசியல் கட்சிகளும் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8-ந் தேதிக்கு முன்னர் பெறப்பட்டதற்கு ஆதாரமாக கணக்குகள் இருக்கவேண்டும்.

வரவு-செலவு பற்றிய கணக்குகளில் ஏதாவது முரண்பாடு இருப்பதாக தெரியவந்தால் அதுபற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.