தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அதிமுகாவின் பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.
ஆனால் அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுகாவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலாதான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சசிகலா அதிமுகாவின் பொதுச் செயலாளர் ஆனால் அவ்வளவு தான் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் கூறுகையில், சசிகலா அதிமுகாவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் தமிழக அரசு சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் இயங்கும்.
அதனால் சசிகலா உறவினர்களின் சொல்படிதான் தமிழக அரசும் இயங்கும். ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு விரட்டப்பட்டவர்களை கொண்டு கட்சியை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் நினைப்பதாகவும், இது கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளனர்.
மேலும் யாரெல்லாம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆதரவு அளிக்கிறார்கள் என்று உற்று நோக்கி பார்த்தால் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் தான் ஆதரிக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி சுமார் 30 ஆண்டுகள் சசிகலாவுடன் ஒன்றாக இருந்தவர் ஜெயலலிதா, ஏன் அவருக்கு கட்சியில் எந்த ஒரு பொறுப்பும் தரவில்லை, அவருக்கு அதற்கான தகுதி இல்லை என்பதால் தானே, ஜெயலலிதாவை பொறுத்தவரை அவர் ஒரு சகோதரி அவ்வளவு தான், மற்றபடி ஒன்றும் இல்லை.
சசிகலா குடும்பத்தினர் தற்போது நிகழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி எஜமானி ஆக முயற்சி செய்கிறார்கள், இதை அனைவரும் யோசிக்க வேண்டும், தகுதியானவரை தேர்ந்தேடுக்க வேண்டும்.
இதையும் மீறி சசிகலா மற்றும் மன்னார் குடி குடும்பத்தினர் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகச் செயல்களை மக்களிடத்தில் கூற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.