அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கூட்டத்தில் திரளான இந்திய சமூகத்தினர்- இந்துக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்துக்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம்” என கூறினார்.
தொடர்ந்து டிரம்ப் பேசும்போது, “இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர்கள் வியப்பு அளிப்பவர்கள். அவர்கள் நமக்கு வாக்களித்தார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்” என புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக டிரம்ப் குடியரசு கட்சி இந்து கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதும், இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்படுவதற்கு தான் பாடுபடப்போவதாக கூறியதும் நினைவுகூரத்தக்கது.