உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி வரும் புதன் கிழமை வீடு திரும்புகிறார் என்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமையன்று மீண்டும் காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், டெல்லியில் இருந்து ராகுல்காந்தியும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று, மு.க. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக முன்னணி தலைவர்களிடம் விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கவேலு, குன்றக்குடி அடிகளார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் இன்று காலை காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் ஒன்இந்தியாவிடம் கூறியதாவது,
திமுக தலைவரை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு சென்றோம். அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. மு.க. அழகிரியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். அப்போது, திமுக தலைவரின் உடலில் ஏற்பட்டுள்ள புண்கள் காய்ந்து வருவதாகவும், இதயத் துடிப்பு சீராக இருப்பதாகவும் அழகிரி கூறினார்.
மேலும், ஒவ்வாமையினால் ஏற்பட்டுள்ள சளி மட்டும்தான் கொஞ்சம் தீராமல் இருக்கிறதென்றும், இதற்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அழகிரி தெரிவித்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் வரும் புதன் அல்லது வியாழக்கிழமை வீடு திரும்புவார் என்றும் அழகிரி சொன்னார்.
அப்போது, திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், ராஜாத்தி அம்மாள், மு.க. தமிழரசு மற்றும் திமுகவின் முன்னணித் தலைவர்கள் உடன் இருந்தனர் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.