ஏழு ட்ரக் லொறிகளில் 1300 கோடி ரூபா வெளியேற்றப்பட்டதா?

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி ரூபா பணம் இரகசியமாக வெளியில் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமான ஓர் குற்றச்சாட்டாகும்.

நாணயத் தாள்கள் தொடர்பிலான நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்வதற்காக நிதி அமைச்சரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகிய தரப்புக்களுக்கு ஜனாதிபதி பணிக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் 5000 ரூபா நாணயத்தாள் பயன்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும்.

நிதி முறைமை குறித்த நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப இந்த விசாரணை அவசியமானது. 1300 கோடி ரூபா பணம் இரகசியமாக மத்திய வங்கியிலிருந்து வெளியேறியிருந்தால் அது பாரிய ஓர் பிரச்சினையாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு பணம் எடுக்கப்பட்டிருந்தால் ஏன் இவ்வளவு காலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

1300 கோடி ரூபா பணத்தை வெளியில் எடுத்துச் செல்வதற்கு ஏழு ட்ரக் லொறிகளேனும் தேவைப்பட்டிருக்கும், லொறி சாரதிகள், உதவியாளர்கள், மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பந்துல குணவர்தன கோரியுள்ளார்.