ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய கடற்படை உயரதிகாரிக்கு விசேட பாதுகாப்பு?

சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படை உயரதிகாரி ஒருவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை லெப்டினன் கமாண்டர் ஒருவருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் 123 படகுகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் லெப்டின் கமாண்டர் நிலை வகிக்கும் அதிகாரிகளுக்கு பிரத்தியேக பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை.

எனினும் இந்த அதிகாரி கடற்படைக்கு எதிரான வழக்கு ஒன்றில் அரசாங்க சாட்சியாளராக முன்னிலையாகிய காரணத்தினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சித்திரவதை கூடங்கள் காணப்பட்டதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கு அந்த இடங்களை இந்த அதிகாரியே காண்பித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் கடற்படைத்தளபதி மற்றும் கடற்படை வீரர்களினால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்த அதிகாரி கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரியின் பாதுகாப்பிற்காக இரண்டு கடற்படை வீரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு உள்ளதுடன், ரீ-56 ரக துப்பாக்கிகள் இரண்டு, கைத்துப்பாக்கிகள் இரண்டு ஆகியனவும் கடற்படையினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரி பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருவதாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணைக்குழு ஒன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.