டெல்லியை சேர்ந்த கோபால் ராம்(48) என்பவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்தில் ஒரு ஏஜென்ட்டிடம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவழித்து, சமையல் வேலை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
ஆனால், அவர் எதிர்ப்பார்த்தைபோல் அங்கு சமையல் வேலை கிடைக்கவில்லை. மாறாக, பாத்திரம் கழுவதுபோன்ற கூலிவேலைதான் கிடைத்துள்ளது. அங்கு சம்பளமும் ஒழுங்காக கிடைக்காததால் பல இடங்களுக்கு மாறி, கடைசியில் ஒரு ஓட்டலில் சமையல் வேலையில் சேர்ந்துள்ளார்.
அங்கும் ஆறு மாதத்துக்கு பிறகுதான் சம்பளம் கிடைத்தது. அந்தப் பணத்தையும் அவருடன் வேலை செய்யும் ஒரு நண்பர் கைபதிலாக வாங்கி, சூதாட்டத்தில் தோற்று விட்டார். இதனால், இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்துக்கு பணம் அனுப்ப முடியல்விலையே என்ற மனவேதனையிலும், பணிச்சுமையாலும் மாரடைப்பு வந்து கடந்த 10-ம் தேதி கோபால் ராம் இறந்துப் போனார்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள அவரது மனைவி ராதா தேவி, இந்த தகவலை அறிந்து சோகத்தில் மூழ்கினார். கணவரின் உடலை ஜப்பானில் இருந்து தாய்நாட்டுக்கு கொண்டுவரும் வழியறியாமல் டெல்லியில் உள்ள பெண்கள் நலத்துறை ஆணையத்தின் உதவியை அவர் நாடினார்.
அங்குள்ள சில உயரதிகாரிகள் அந்தப் பெண்ணின் பரிதாப நிலையை கண்டு மனமிரங்கி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு சென்றனர்.
இதையடுத்து, ஜப்பானில் இருந்து கோபால் ராமின் பிரேதத்தை மத்திய அரசின் செலவில் கொண்டுவர சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.