மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்ட பன்னீர்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 6 மணியளவில் பன்னீர் செல்வம் புறப்பட்டு சென்றார்.

தல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர் உடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் டெல்லி பயணம் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமையன்று பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார்.

அப்போது தமிழ்நாட்டில் வர்தா புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டியும், முழு உருவ வெண்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக நேற்று மாலை கவர்னர் வித்யாசகர் ராவை சந்தித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். சென்னை அருகே கடந்த 12-ம் திகதி வர்தா புயல் கரையை கடந்தது.

அப்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன.

மேலும் மீனவர்களின் படகுகள், வலைகள், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த புயலால் 10 ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும் தமிழக அரசு முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கி மீட்பு பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்து வருகிறது.

புறநகர் பகுதியில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து மின்சாரம் கொடுக்கப்படவில்லை. இதனால் 3 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். வர்தா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய சேதங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து மத்திய அரசின் நிவாரண உதவியை கேட்க டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை பிரதமரை சந்தித்து தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்க உள்ளார்.