கொசுக்களை விரட்டும் செடிகள்!

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

கொசுக்கள் மனிதர்களின் வில்லன்கள். வயது வித்தியாசமில்லாமல் மக்களை வதைக்கும் கொசுக்களுடனான போராட்டம் ஆண்டாண்டு காலமாக தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எத்தகைய முயற்சிகளை கையாண்டாலும் குளிர் காலங்களில் அவைகளின் படையெடுப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் வீட்டை சுற்றி ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு வட்டம் அவைகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும்.

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அத்தகைய ஆற்றல்மிக்க செடிகளை பற்றி பார்ப்போம்.

துளசி: இந்தியாவில் வளரும் பெருமைக்குரிய மூலிகைகளில் துளசியும் ஒன்று. அதன் மகத்துவங்களை அறிந்து கொள்வதற்காக பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. துளசி புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் போன்றவை பல கொடிய கிருமிகளை கட்டுப்படுத்தக் கூடியது. துளசியை சாறு எடுத்து உடலில் பூசிக்கொண்டால் கொசுக் களை அண்டாது. அதன் வாசனை காற்றில் பரவி கொசுக்களை விரட்டும். துளசி செடியை ஜன்னல், பால்கனியில் வைத்தால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும்.

துளசி இயற்கையான கொசு விரட்டி. இந்த செடியை சற்று ஆழமான தொட்டியில் நட்டு வைத்தால் அகன்று வளரும். ஒரு டம்ளர் துளசி சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீரும், சிறிது நீலகிரி தைலமும் கலந்து பாட்டிலில் அடைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் ஸ்பிரே செய்து வந்தால் கொசுக்கள் விரட்டியடுக்கப்படும்.

புதினா: இதுவும் கொசுக்களை விரட்டும் சக்தி கொண்டது. சிறிய தொட்டிகளில் இதனை ஆங்காங்கே வளர்க்கலாம். புதினா செடிகள் நர்சரி பண்ணைகளில் கிடைக்கும். கடையில் வாங்கும் புதினா இலையின் அடிப்பாகத்தை தொட்டியில் நடவு செய்தாலும் துளிர்விட்டு வளரும்.

சாமந்தி பூ: இந்த பூக்களின் வாசனை கொசுக் களுக்கு அறவே பிடிக்காது. சிறந்த கொசு விரட்டியாக செயல்படுவதால் கொசு மருந்து, கிரீம்கள் தயாரிப்பில் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த செடியை தொட்டியில் வளர்த்து வீட்டு வாசலில் வைக்கலாம். தரையில் வளர்க்கும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நிறைய கிளைகள் துளிர்விட்டு பூக்கள் அதிகமாக பூக்கும். அவைகளின் வாசனை கொசுக்களை விரட்டி அடித்துவிடும். இந்த செடியை தக்காளி பழ செடிகளுடன் சேர்த்து வளர்த்தால் ஆரோக்கியமான, வளமான தக்காளிப்பழம் கிடைக்கும். தக்காளி செடிகளை தாக்கும் பூச்சுகளையும் இந்த பூக்கள் விரட்டி விடும்.

லெமன் கிராஸ்: இது ‘சிட்ரோனெல்லா’ என்று அழைக்கப்படும். இதன் நீளமான இலைகள் பார்க்க அழகாக இருக்கும். செடி சுமார் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். இலைகள் வெகு நாட்கள் வாடாமல் இருக்கும். இதன் சாறு எலுமிச்சை பழ வாசனை கொண்டிருக்கும். இவற்றில் தயாராகும் மெழுகுவர்த்திகளை இரவில் ஏற்றி வைத்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் ஓடி விடும்.

ரோஸ்மேரி:  இந்த செடியும் சிறந்த கொசு விரட்டி. இதன் இலைகளை உலர்த்தி அதனை பொட்டலமாக பொதிந்து ஆங்காங்கே தொங்க விடலாம். தீ கனலில் இலையின் துகள்களை சாம்பிராணி போன்று போட்டு வீடு முழுவதும் பரப்பலாம். அந்த புகை வாசனை கொசுக்களை வீட்டுக்குள் நெருங்க விடாது. இந்த செடிகளை தோட்டம், பால்கனி, ஜன்னல்களில் வளர்க்க முடியும்.