கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் “பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு” என்ற தொனிப்பொருளில் இன்று(19) காலை 9.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வாழ்க்கையே திண்டாட்டம் wi–fi இல் கொண்டாட்டம், விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே, வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருவதாயிரம் குடும்பங்கள் இதுவரை நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றது.
பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என ஆணித்தனமாக தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆரப்பாட்டத்தின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரிடம் கண்டன மனு கையளிக்கப்பட்டுள்ளளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான மகஜர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தர அருமைநாயகம் அவர்களிடமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடக்குமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த்தேசியக்கூட்டரமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கான மகஜர்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீரதனிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.