இன்னொரு ரஜினி படத் தலைப்பும் காலி…!

ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வலம் வரும் சிலர், குறிப்பாக தமிழ் சினிமா நடிகர்கள் சிலர், ரஜினியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து தங்களை பிரபலமாக்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் வருகிறார்கள். ரஜினி எதையும் கண்டு கொள்வதில்லை என்பதை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட நபர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடிகர் கம் இயக்குநரான இவர்தான் ரஜினியின் படத் தலைப்புகளை கபளீகரம் செய்வதில் முக்கியமானவர்.

இவர் முதலில் எடுத்துக் கெடுத்த தலைப்பு ராஜாதி ராஜா. ரஜினி நடித்த ராஜாதி ராஜாவில் ஆக்ஷன், காமெடி, பாடல்கள் அத்தனையும் பட்டையைக் கிளப்பும். அந்தத் தலைப்பில் ராகவா லாரன்ஸ் நடத்த படமோ குப்பையாக இருந்தது.

இப்போது ரஜினியின் எவர்கிரீன் ஹிட்டான மூன்று முகம் படத்தை அதே தலைப்பில் ரீமேக் செய்யப் போவதாக முன்பு அறிவித்தார். அடுத்து மீண்டும் ஒரு ரஜினி படத்தை ரீமேக் செய்யப் போகிறாராம். அது ரஜினி – விஜயசாந்தி நடித்த ப்ளாக்பஸ்டர் படமான மன்னன். இந்தப் படத்தை இயக்கிய பி வாசுவே ராகவா லாரன்ஸை வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம்.

விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து செம கடுப்பிலிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.