ரஷ்ய ராணுவ விமானங்களில் மிகவும் பழமையான II-18 ரக விமானம் இன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. 39 பேர் பயணம் செய்த அந்த விமானம், யாகுடியா பிராந்தியத்தில் உள்ள திக்சி நகரின் அருகே பறந்துகொண்டிருந்தபோது விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக விமானம் தரையில் மோதியது.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 7 பேர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
4 என்ஜின் கொண்ட இந்த விமானம் 1950-களில் வடிவமைக்கப்பட்டதாகும். அவற்றில் சில விமானங்கள் இன்றும் ராணுவத்தில் உள்ளன. ஆனால், போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று வீரர்களை ஏற்றிச் சென்றபோது கடுமையாக காற்று வீசியதால் அவசரமாக தரையிறங்கும்போது விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.