உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அங்கு பிரசாரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அங்கு முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் ஏற்கனவே 1 மாதம் பிரசாரம் செய்து முடித்துள்ளார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி இருவரும் இன்று (திங்கட்கிழமை) உத்தரபிரதேசத்தில் போட்டி பிரசாரத்தில் குதித்துள்ளார். பிரதமர் மோடி இன்று கான்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
ராகுல்காந்தி ஜனூன்பூரில் நடக்கும் கூட்டத்தில் பேசி இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் மேலும் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இன்றைய பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி பேசுவார்கள் என்று தெரிகிறது.
இந்த வார இறுதியில் வாரணாசி தொகுதியில் மோடி, ராகுல் இருவரும் பிரசாரம் செய்ய உள்ளனர். இதனால் உத்தரபிரதேச தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.