பட்ஜெட்டில் ஏழைகள் – நடுத்தர மக்களுக்கு சலுகை: பிரதமர் மோடி அதிரடி திட்டம்!

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.

இதையடுத்து ரூ.13 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்று, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரம் ஏழைகள், நடுத்தர மக்கள், தொழில் செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினரையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் கிடைக்காமல் பொதுமக்கள் திணறிய படி உள்ளனர். குறிப்பாக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் கிடைக்காததால் மக்களிடம் அதிருப்தி காணப்படுகிறது.

50 நாட்களுக்குப் பிறகு அதாவது வரும் 31-ந் தேதிக்குப் பிறகு நிலைமை சீராகி விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏ.டி.எம்.கள் முடங்கி கிடப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இது மத்திய அரசு மீதான அதிருப்தியை மக்களிடம் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதை எதிர்கொள்ள முறையான முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் எதுவும் ஒழுங்காக செய்யப்படவில்லை என்ற குமுறல் மக்கள் மனதில் உள்ளது.

மக்களிடம் நிலவும் இந்த அதிருப்தியைப் போக்க பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார். அதன் அடிப்படையில் புதிய அதிரடி திட்டம் ஒன்றை அவர் தீட்டியுள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தபோது பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி தனது புதிய அதிரடி திட்டம் பற்றி சூசகமாக எம்.பி.க்களிடம் சில தகவல்களை வெளியிட்டார்.

பிரதமர் மோடி பேசும் போது, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், நடுத்தர வகுப்பு மக்கள் சுரண்டப்படுதில் இருந்து காப்பது, தொழில் செய்பவர்கள் எதிர் கொள்ளும் துன்புறுத்தல் களைக் குறைப்பது ஆகிய மூன்றுக்கும் முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு செயல்படும் என்றார். இதன்மூலம் மத்திய அரசு ஏழைகள், நடுத்தர மக்கள், தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தனது அதிரடி திட்டத்தை அறிவிப்புகளாக வெளியிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளார். அதற்கு பதில் மத்திய பட்ஜெட்டில் அந்த சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளார். எனவே பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகள், நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஏராளமான சலுகைகளை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான ஒரு மூத்த தலைவர் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனதில் மத்திய அரசு மீது சுமூகமான மனநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் பிர தமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

ஏழைகளுக்கு பல புதிய சலுகைகள் அந்த பட்ஜெட்டில் வர உள்ளது. எனவே பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் புரட்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.