கருணாநிதி, 2 நாட்களில் வீடு திரும்புவார்: மு.க.ஸ்டாலின் தகவல்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் திடீரென அலர்ஜி ஏற்பட்டது. இதனால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. இதற்கு வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதற்கு சிகிச்சை பெற்ற அவர் 7-ந்தேதி வீடு திரும்பினார்.

கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்த கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர், காவேரி ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அப்போது நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை உறுதி செய்த டாக்டர்கள் அதற்காக சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. கருணாநிதியின் தொண்டையில் துளை போடப்பட்டு சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.

கடந்த 5 நாட்களாக கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி குணம் அடைந்துள்ளார்.

நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்க்கிறார், பத்திரிகைகளையும் படிக்கிறார். இருப்பினும் இன்னும் சில தினங்கள் கருணாநிதி ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன்படி காவேரி மருத்துவமனையில் கருணாநிதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல் நிலைப்பற்றி கேட்டறிந்தார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று காவேரி ஆஸ்பத்திரிக்கு கருணாநிதியை பார்க்க சென்றார். ஆஸ்பத்திரியில் மு.க.அழகிரியை சந்தித்து பேசிய அவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறும் போது கருணாநிதியை பார்த்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன். நீண்ட நாட்கள் அவர் வாழ வேண்டும். கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் காலில் விழுந்து ஆசி பெற விரும்புகிறேன் என்றார்.

உடல்நிலை சீரானதை தொடர்ந்து, கருணாநிதி இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புகிறார். இதனை தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் இதனை உறுதி செய்தார்.