2020ஆம் ஆண்டு பிரதமர் பதவியை இலக்கு வைத்து களமிறங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பான கூட்டு எதிர்க்கட்சியின் கலந்துரையாடல் கடந்த வாரம் இடம்பெற்றத.
கொழும்பிலுள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது தொடர்பான ஒன்று கூடல் நடைபெற்றது. இதன்போது அடுத்த வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவை களமிறங்குவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக மஹிந்த போட்டியிடுவது சாதகமாக அமையாதென வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் இரண்டிற்கும் ராஜபக்சர்கள் செயற்படுவது தொடர்பில் மக்கள் கடுமையான எதிர்ப்பு வெளியிட கூடும் என வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷர்கள் தொடர்பான வீரவன்சவின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு மஹிந்த அணியின் விசுவாசியான வீரவன்ச போன்றோர் களமிறங்குவது சாதகமாகும்.
ஆனால் அரசாங்கத்தின் உயர் தரத்திலான ஆலோசகர் பதவி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.