சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்!

சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். எனவே இந்த அறுவை சிகிச்சைக்காக கடந்த மாதம் 7-ந்தேதி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 10-ம்தேதி சுஷ்மா சுவராஜூக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது.

மேலும், அவரது உடல்நிலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் உள்ளிட்டோரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது வந்தது.

இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 10-ம்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இன்று இரவு 7 மணியளவில் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மா சுவராஜ் வீடு திரும்புவதற்கு முன்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.