வார்தா புயல் நிவாரணத்துக்கு ரூ.22500 கோடி தேவை: பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வார்தா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கியது. புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன. மரங்களும் வேரோடு சாய்ந்தன. தென்னை, மா, வாழை, நெற்பயிர்களும் சேதமடைந்தன. தொலைத்தொடர்பு சேவையும் முற்றிலுமாக முடங்கியது.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை ஒதுக்கி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். மேலும் சேத மதிப்புகளை பார்வையிட மத்திய குழுவும் இன்று வருகிறது.

இந்த நிலையில் வார்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டது. இந்த அறிக்கையுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர்.

இன்று மாலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை அவரிடம் கொடுத்தார். மேலும், புயல் நிவாரணப் பணிகளுக்கு 22,500 கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து கடிதம் கொடுத்தார்.

தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.