உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை பிடிக்க களமிறங்கியிருக்கும் முந்தைய ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள களப்பணியாற்றி வரும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவற்றுக்கிடையே, இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.வும் வியூகம் வகுத்து பரிவர்த்தனை பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், கான்பூரில் இன்று நடந்த பரிவர்த்தனை பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது:-
இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறது. குறிப்பாக உத்தர பிரதேச மாநில இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு வசதிகளை செய்து கொடுத்தால், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைய பங்களிப்பை செய்ய முடியும். நாடும் வேகமாக வளர்ச்சி அடையும்.
குண்டாயிசத்தினால் உத்தர பிரதேச மக்கள் சோர்ந்துபோய்விட்டனர். அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது. எனவே, ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. ஊழல் இல்லா நடைமுறைக்கு அரசியல் கட்சிகள் உதாரணமாக திகழவேண்டும்.
தொடர்ந்து தேர்தல்கள் நடப்பதால் ஏராளமான நேரம் வீணடிக்கப்படுகிறது. அந்த நேரத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முடியும். எனவே, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனையை தொடங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்துவது, அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினேன். ஆனால், இந்த விஷயங்களை விவாதிக்க விருப்பம் இல்லாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின.
பண ஒழிப்பு நடவடிக்கைக்கு முன்பு 100 ரூபாய் நோட்டுகளுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது, மக்கள் மத்தியில் குறிப்பாக ஏழைகள் மத்தியில் அதன் மதிப்பு அதிகரித்துள்ளது.
இப்போது, கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போரை கண்டுபிடிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகிறோம். கருப்பு பணம் வைத்திருப்போரின் வலிமை நமக்குத் தெரியும். வங்கி அதிகாரிகளுக்கு அவர்கள் லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட எதையும் செய்வார்கள். ஆனால், நாம் அதனை எதிர்த்து போராடுகிறோம்.
கடைக்காரர்கள் பில் தொகையை பெறுவதற்காக இப்போது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அத்துடன், அதிர்ஷ்ட குலுக்கல் திட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான பணத்தை பரிசாக பெறுகின்றனர்.
எந்த பிரதமர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்? என்பது வரலாற்றில் இல்லாமல் போனாலும், கருப்புப் பணத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் இடம்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.