புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.22,573 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில், முதல்கட்டமாக ரூ.1000 கோடி வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.
32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை, மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார். அவர் ஆற்றிய சேவையால் உலக அளவில் அவரது பெயர் தனி முத்திரை பதித்திருக்கிறது.
அதனை நினைவு கூறும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா மற்றும் சிலை வைப்பது தொடர்பாக ஆவன செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.