வீதிப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை உச்ச அளவுக்கு அதிகரிப்பதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைத்துக் கொள்ள முடியுமென அரசாங்கம் காரணம் கூறிக் கொண்ட போதிலும், அவ்வாறான நம்பிக்கை அடியோடு தென்படவில்லை.
யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பல்வேறு இடங்களிலும் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துகளையும் அதனால் ஏற்பட்ட மரணங்களையும் பார்க்கின்ற போது அதிர்ச்சி ஏற்படுகின்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு விபத்திலேயே பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்தும் உள்ளனர்.
அதே தினத்தன்றும் மறுநாளும் வட பகுதியில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசமான வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தையும் தாண்டி விட்டது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம்.
ஆகவே அபராதத் தொகையை அதிகரிப்பதனால் மாத்திரம் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி விட முடியுமென்ற நம்பிக்கை தவறானது என்பது இங்கு நன்கு புரிகின்றது.
வாகன விபத்துகள் அதிகரித்திருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை நன்கு ஆராய்ந்து அதற்கான பரிகாரங்களைத் தேடுவதே இப்போது முக்கியமானதாகும்.
வீதிப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட விடயங்களில் கடந்த காலத்தில் ஏராளமான தவறுகள் நடந்து விட்டன.
அரசாங்கங்களின் பொறுப்பற்ற தன்மையும், அதிகாரிகள் மத்தியில் லஞ்சம் சாதாரணமாகிப் போனதுமே இதற்கான முக்கிய காரணங்கள்.
பதினெட்டு வயதை நிறைவு செய்த எந்தவொரு நபரும் வாகனம் செலுத்தப் பழகிக் கொண்ட பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற நடைமுறை இலங்கையில் உள்ளது.
சாரதி லைசன்ஸ் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர் சாதாரணமான அறிவாற்றல், மனித நேயம், குற்றம் நாடாத சுபாவம் போன்றவற்றையெல்லாம் கொண்டதொரு பிரஜையா என்றெல்லாம் ஆராயப்பட வேண்டிய நடைமுறை இலங்கையில் கிடையாது.
குறைந்த பட்சக் கல்வியறிவும் கொண்டிருக்காத, குற்றச் செயல்களில் ஊறிப் போன சமூகக் கட்டமைப்பிலிருந்து வந்த ஒருவர் கூட சாரதி லைசன்ஸ் பத்திரத்தை இலகுவாகவே பெற்றுச் செல்ல முடியும்.இதுவே எமது நாட்டிலுள்ள நடைமுறை.
மேற்கு நாடுகளில் இவ்வாறெல்லாம் கிடையாது. சாரதி லைசன்ஸ் கோருவோரின் அடிப்படைக் குணாம்சங்கள் அங்கே பரிசீலிக்கப்படுகின்றன. வீதியில் நடமாடும் உயிர்களை அற்பமாக எண்ணுகின்ற சாரதிகள் அங்கெல்லாம் லைசன்ஸ் பெற்று விட முடியாது.
இலங்கையில் உள்ள வாகனமோட்டிகளில் பெருமளமானவர்கள் வன்முறை சுபாவம் நிறைந்தவர்கள். முச்சக்கரவண்டி செலுத்துகின்ற ஒருவரில் இருந்து ஆடம்பரக் கார் ஓட்டுகின்ற ஒருவர் வரை இவ்வாறான வன்முறை சுபாவம் நிறைந்திருக்கின்றது.
சாரதி பயிற்சியில் நன்கு தேறியமைக்கான செயன்முறைப் பரீட்சையையும் இவர்கள் முறையாகப் பூர்த்தி செய்திருப்பார்களா என்பது சந்தேகமே!
அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சம் ஊறிப் போனதால் ஏற்பட்ட மோசமான விளைவுகள்தான் இவை. லஞ்சத்தை இத்தனை மோசமாக வளர விட்டதற்கான பொறுப்பு கடந்த அரசாங்கங்களுக்கே உரியது.
மக்கள் நடமாடுகின்ற வீதியில் வாகனம் செலுத்துகின்ற ஒருவர் வாகனமோட்டும் திறனை மாத்திரம் கொண்டிருந்தால் போதாது. வீதியில் நடமாடும் உயிர்களை மதிக்கின்ற ஜீவகாருண்யப் பண்பையும் கொண்டிருப்பது முக்கியம்.
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் கூடுதலாக முச்சக்கரவண்டிகளும், தனியார் பஸ்களுமே சம்பந்தப்பட்டுள்ளன.
குற்றமிழைப்பதில் பரிச்சயமாகிப் போனோரிடமிருந்து நல்லொழுக்கத்தையும் ஜீவகாருண்யத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக அரசாங்கம் இவ்விடயத்தில் உதாசீனமாக இருந்து விடவும் முடியாது.
இவற்றுக்கெல்லாம் அடுத்ததாக வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துப் பொலிஸார் கொண்டுள்ள கடமைப் பொறுப்பை இவ்விடத்தில் சுருக்கமாக ஆராய வேண்டியிருக்கிறது.
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் தொடர்பாக மக்கள் மத்தியில் பொதுவாக நல்லபிப்பிராயம் என்றுமே இருந்ததில்லை. அவர்களது கடமையில் நேர்மைத்தன்மை உண்டென்ற நம்பிக்கை மக்களிடம் கிடையாது.
போக்குவரத்துப் பொலிஸ் பிரிவானது லஞ்சத்தில் ஊறிப் போனதென்று மக்கள் பொதுவாக நினைக்கின்றனர். அதற்காக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேர்மையற்றவர்களெனக் கூறி விட முடியாது.
கூடுதலானவர்கள் முறைகேடாக நடந்து கொள்வதனால், நேர்மையான உத்தியோகத்தர்களும் பாவத்தைச் சுமக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்துப் பொலிஸார் மீது இவ்வாறு களங்கம் பதிக்கப்பட்டிருப்பதனாலேயே சாரதிகள் துணிச்சலுடன் குற்றமிழைக்க முற்படுகின்றனர்.
எந்தவொரு குற்றத்தையும் லஞ்சத்தின் மூலம் மூடி மறைத்து விடலாமென சாரதிகள் நினைக்கின்றனர். எனவே போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் மீதான களங்கம் அகற்றப்படுவது முக்கியம்.
உயரதிகாரிகள் இனிமேலாவது அதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பது பிரதானம்.நெடுஞ்சாலைகளிலும் சிறு வீதிகளிலும் எப்போதும் போக்குவரத்துக் குற்றங்கள் நடந்தபடியே உள்ளன.
காதைப் பிளக்கும் பேரொலியுடனும், புகையைக் கக்கியபடியும் வாகனங்கள் செல்கின்றன. சில வாகனங்கள் எல்லை மீறிய வேகத்துடன் தறிகெட்டு ஓடுகின்றன.
மஞ்சள் கோடு கடவையை அலட்சியப்படுத்தியபடி செல்கின்ற வாகனங்கள் ஏராளம்.
போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவித்தபடி, போட்டி போட்டபடி அசுர வேகத்தில் தனியார் பஸ்கள் செல்வதை நாம் தாராளமாகவே காண்கிறோம்.
ஆனால் இக்காட்சிகளெல்லாம் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களுக்குத் தென்படுவதில்லை.
சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்ட சந்திகளில் எங்காவது மறைந்து நின்றபடி சிவப்பு விளக்கை அலட்சியம் செய்தவாறு வருகின்ற வாகனங்களைக் கண்டுபிடிப்பதில் மாத்திரமே இவர்களின் கடமைப் பொழுது கழிகின்றது.
கொழும்பில் உள்ள சில சந்திகளில் ஒரே தடவையில் நான்கு பொலிஸார் இதற்காக நிற்பதுவும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. இவ்வாறான ஏராளமான குறைகளின் மத்தியிலேயே வீதி விபத்துகள் பெருகிச் செல்கின்றன.
விபத்துகளுக்கான அடிப்படையை ஆராயாமல் அபராதத் தொகையை அதிகரிப்பது பலனைத் தருமென்று நம்ப முடியவில்லை.
அநியாய மரணங்களைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.