தேசிய கீதம் மூலம் வர்த்தக சுரண்டல் செய்யக் கூடாது: மத்திய அரசு!

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படுவதை கொண்டு திரையரங்குகளில் வர்த்தக சுரண்டல் நடைபெறக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசின் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தொலைபேசி மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அப்போது, தேசிய கீதத்தை கொண்டு நாடகமாடுவதோடு இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் கண்டிப்பாக தேசியக் கொடி காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள மாநிலத்தில் உலகப்பட விழாவில், திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

மேலும், தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்கவில்லை என்றும் அவமதிப்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தேசிய கீதம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.