ஜெயலலிதாவின் நகல் தீபாவின் பேட்டியை தடுத்து நிறுத்திய அரசு கேபிள் டிவி!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், ஜெ.வைப் போலவே தோற்றமும் உடையவரான தீபா, தந்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றை அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாகாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிகமாக உச்சரிக்கப்படுகிர பெயர் தீபா.

இவர், தோற்றத்திலும், கம்பீர பேச்சிலும், கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை என அனைத்திலும் ஜெயலலிதாவைப் போலவே உள்ளவர்.

இவர், ஜெயலலிதாவின் ரத்த உறவு, அதாவது அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகளாவார்.

இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அப்பொழுது, தனது அத்தையை பார்ப்பதற்காக தீபா அப்பல்லோ மருத்துவமனை சென்றுள்ளார். ஆனால், ஜெ.வை பார்ப்பதற்கு தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 5 ஆம் திகதி ஜெ. உயிரிழந்ததையடுத்து, கூட்டத்தோடு கூட்டமாக யாரோ ஒருவர் போல் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார் ஜெ.வின் ரத்த உறவான தீபா.

இந்த நிலையில், தீபா தனது அத்தை, ஜெயலலிதாவுடனான உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தந்தி டிவிக்கு விரிவாக பேசி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் குறித்து மிக விரிவாக பேசியுள்ளார்.

தீபா பேசியுள்ள இந்த பேட்டியானது நேற்று இரவு 9 மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால், இதை தடுப்பதற்காக தமிழக அரசு கேபிள் டிவியானது, பல இடங்களில் தந்தி டிவியை கட் செய்து வைத்துள்ளது.

மேலும், பல இடங்களில் குறிப்பாக பேட்டி ஒளிபரப்பாகும் நேரத்தில் கேபிள் டிவி கட்டாகி 1 மணிநேரத்திற்கு பிறகு தான் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கேபிள் டிவியில் குறித்த நேரத்தில் தந்தி டிவி தெரியவில்லை என அந்த டிவியின் நிருபர் லட்சுமிபதி ராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால், தீபாவின் தோற்றம், பேச்சு, உடல்மொழி என ஜெயலலிதாவின் நகல் போன்று இருப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்திருக்கிறது.

இனி ஜெயலலிதாவின் ஒரே வாரிசு; அதிமுகவின் ஒரே தலைவி ஜெ. தீபா என தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.