விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் பேசிய வடிவேலு…
“மக்கள் முகத்தில் கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை பார்க்க முடியவில்லை. துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறதுக்கே சங்கடமாக இருக்குது. மக்கள் கஷ்டப்படும் போது படத்தை விட வேண்டாம் என்றுதான் ‘கத்திச்சண்டை’ ரிலீசை தள்ளி வைத்தோம். கொஞ்ச நாளுக்கு பிறகு ‘ரிலீஸ்’ பண்ணலாமுன்னு இருந்தோம். இப்ப நாமாவது மக்களை சிரிக்க வைப்போம் என்று ‘கத்திச்சண்டை’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
கடைசிவரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போரடித்து விடும். அதனால் தான் விதம் விதமாக ‘விக்’ வைக்கிறேன். மேக்கப் போடுகிறேன். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.
லிங்கா படத்தில் நடிக்க கூப்பிட்ட போது அதில் இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகளில் தான் என்னுடைய கதாபாத்திரம் வருவதாக இருந்தது. காமெடி குறைவாக இருந்ததால்தான் அதில் நடிக்கவில்லை. ஏன்னா என்னை நம்பி வர்ற மக்களை நான் ஏமாற்றிவிடக் கூடாது.
நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்றுதான் விஷால் தம்பிக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அவரிடம் பொய் இல்லை. உழைப்பு இருக்கு. இப்போது உள்ள நிர்வாகிகள் நல்லா பண்றாங்க. கவனமாக பார்த்து பார்த்து பண்றாங்க எப்படியோ அரை கிணறு தாண்டிட்டாங்க. இனி சங்கத்துல நடக்கிற எல்லா விஷயமும் வெற்றிதான்” என்றார்.