நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நெல்சிப் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகள் வெளிநாடு சென்றது எப்படி? என வடமாகாண சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த மாகாண சபையின் 70ம் அமர்வு இன்று(20) நடைபெற்றுது. இந்த அமர்வில் 2017ம் ஆண்டுக் கான வரவு செலவு திட்டத்தில் மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதம் இடம்பெற்றதுடன் இந்த விவாதத்தின்போதே உறுப்பினர்கள் மேற்படி கூறியுள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நெல்சிப் திட்டத்தில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படுகின்றது.நிதி குற்ற விசாரணை பிரிவுக்கும் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் முன்னதாகவே வெளிநாடு சென்றுவிட்டார். மற்றொரு அதிகாரி பின்னர் சென்றுள்ளார்.
இவர்களுக்கு பிரதம செயலாளர் எப்படி அனுமதி வழங்கினார்? அரச அதிகாரிகள் வெளிநாடு செல்ல கடுமையான நடைமுறை ஒழுங்குகள் உள்ள நிலையில் எப்படி இவர்கள் வெளிநாடு சென்றார்கள்? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வெளிநாடு சென்ற அதிகாரிகள் உரிய வகையில் பிரதம செயலாளரிடம் அனுமதி பெறவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட அரச அதிகாரிகள் தொடர்பாக அவர்கள் சென்ற நாடுகளின் தூதரகங்களுக்கு பிரதம செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது நிர்வாக திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் பிரதம செயலாளருக்கும் தெரியாமலேயே நடந்தது என எமில் சவுந்தரநாயகம் போன்று திறமையான அதிகாரிகளும் உள்ளார்கள் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.