மேற்கு வங்காள மாநிலம் பாங்குரா என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது போல் வெனிசுலா நாட்டிலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார்கள்.
இதனால் இந்தியாவை போலவே அந்த நாட்டிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த நாட்டு அரசு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததை திரும்ப பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் யார் சொல்வதையும் கேட்பதில்லை. மோடி அரசை பொருத்த வரை இந்த அரசுக்கு காதும் கேட்கவில்லை. வாய் பேசவும் முடியவில்லை.
இந்த பிரச்சனையை சாதாரண மக்கள்கூட புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், பிரதமரால் மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உண்மை நிலவரத்தை எப்போது தெரிந்து கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்வதற்குள் இந்த நாடே நாசமாகிவிடும்.
பொதுமக்கள் தாங்கள் வங்கிகளில் வைத்துள்ள சொந்த பணத்தைகூட எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது, நல்ல சூழ்நிலைதானா? என்பதை பார்க்க வேண்டும்.
மின்னணு சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஒரு ஸ்மார்ட்போனை வாங்குங்கள். அந்த செயலியை பயன்படுத்துங்கள் என்று எது எதையோ சொல்கிறார்கள். அதை எல்லாம் நீங்கள் கேட்காதீர்கள். அவர்கள் சொல்வதை கேட்டால் நீங்கள் பிச்சைக்காரர்கள் ஆகி விடுவீர்கள். மக்கள் தங்களுடைய பணத்தை எங்கு வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.