கெய்ரோ நகரத்தில் உள்ள ஒரு விடுதியின் மூன்றாவது மாடியில் நின்று, கீழே வீதியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கே அவரது கண்களையும், கவனத்தையும் கவர்ந்தது ஒரு காட்சி.
ஒரு முதியவர், வலிமை மிக்க வாலிபர் ஒருவரை தாறுமாறாகப் பேசுகிறார். அதோடு மட்டுமல்லாமல் சரமாரியாகத் தாக்குகிறார். அந்த வாலிபரோ ஏச்சையும் பேச்சையும், அடியையும் தாங்கியபடி மிகுந்த பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனிதருக்கு வேதனையாக மட்டுமல்ல, வியப்பாகவும் இருந்தது. கீழே இறங்கி வந்தார்.
அந்த இளைஞரைப் பார்த்து, “நண்பரே! நீரோ நல்ல உடற்கட்டோடு இருக்கின்ற வாலிபர்; உம்மைத் தாக்கியவரோ வயதானவர். நீர் திருப்பி ஓர் அடி கொடுத்தாலே அவர் சுருண்டு விழுந்து விடுவார். இந்த நிலையில் அவரது ஏச்சையும், பேச்சையும் அவமானத்தையும், அடியையும் ஏன் சகித்துக் கொண்டீர் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர், “நான் அந்தப் பெரியவரிடம் கடன் வாங்கி இருக்கிறேன். என்னால் அவருக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை குறித்த தவணையில் செலுத்த முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் அவர் என்னை ஏசுகிறார்; தாக்குகிறார். அவர் செய்வதை நான் சகித்துக் கொள்வதுதானே நியாயம்? மேலும் ‘வாங்கிய கடனை முறைப்படி திரும்பச் செலுத்தி விடுங்கள்; முதியவர்களை மதியுங்கள்’ என்று எங்கள் நபி கூறியுள்ளார்கள். அதனால்தான் நான் பொறுமையைக் கடைப்பிடித்தேன்” என்று தெரிவித்தார்.
1,400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி கூறிய போதனைகள், இருபதாம் நூற்றாண்டிலும் ஒரு வாலிபரின் இதயத்தை இந்த அளவுக்கு பண்படுத்த முடிகிறது என்றால், அந்த நபியின் சொற்கள் எத்துணை ஜீவன் உள்ளவையாய் இருக்க வேண்டும்? என்று ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றார். இஸ்லாத்தை அறிந்து கொள்ள அதைக் கற்று தெளிவு பெற்றார். அப்படியே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவர்தான் திருக்குர்ஆனுக்கு ஆங்கில மொழியில் அற்புதமான மொழிபெயர்ப்பை ஆக்கித்தந்த அறிஞர் முகம்மது மர்மடியூக் பிக்தால்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மறைந்த ஒரு மாமனிதர் அன்று கூறிய- நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால், அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும்தான். வணக்க வழிபாடுகளில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கை, தனி மனிதன் சார்ந்த வாழ்க்கை நெறி, கொடுக்கல் வாங்கல் என எந்தப் பிரச்சினையானாலும், செயல் முறையானாலும் நபிகளார் கட்டளையிட்டவாறு நடக்கக்கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்தபோதிலும் இந்த உலகில் இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
பெற்றோர், உற்றார், மனைவி, குழந்தைகளை விடவும், இன்னும் சொல்லப்போனால் தன் உயிரை விடவும் நபிகளாரை நேசிக்கக் கூடிய கோடிக்கணக்கான பேர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. உலக வரலாற்றிலேயே சமயம், சமுதாயம், சாம்ராஜ்யம் ஆகிய மூன்றின் நிறுவனராக விளங்கிய பெருமை அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களும் ‘இறைவனையே வணங்குங்கள்’ என்று எடுத்துரைக் கிறார்கள். அவர்களின் வழித்தோன்றல்கள், இறைவனை மறந்து அந்த இறைத்தூதர்களையே கடவுளாக்கி வணங்குகிறார்கள். புத்தரின் வரலாறும் அதுதான். கடவுளே இல்லை என்று சொன்ன புத்தரையே அவரது கருத்துக்கு மாறாக கடவுள் ஆக்கி விட்டார்கள். அவர் புத்த ‘பகவான்’ ஆகி விட்டார்.
ஆனால் ‘இறைவனே பெரியவன்’ என்று சொன்ன நபிகளார், தன்னை சாதாரண மனிதராகவே கருத வேண்டும் என்ற கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அதில் இமாலய வெற்றியும் பெற்றார்கள். இன்றும் அவர்களது கல்லறை காணக்கூடிய இடமாக இருக்கிறதே தவிர வணங்கக்கூடிய இடமாக இல்லை.
ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை முஸ்லிம் களுக்குக் கடமை ஆக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழுகையின்போது ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தொழுகைக்கு வருமாறு தொழுகை அறிவிப்பு (‘பாங்கு’) செய்யப்படுகிறது.
‘அல்லாஹ் அக்பர்’ ‘அல்லாஹ் அக்பர்’ (இறைவன் மிகப் பெரியவன்) என்று தொடங்கும் அந்த அறிவிப்பில் ‘அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூல்லாஹ்’ (முகம்மது நபி இறைவனின் திருத்தூதர்) என்ற சொற்றொடர் உள்ளது. இதில் நபிகளாரின் திருப்பெயரான ‘முகம்மது’ என்பது இடம் பெற்றுள்ளது. (ரசூல் என்பது இறைத்தூதரைக் குறிக்கும் சொல். நபி என்பதன் மற்றொரு பெயர். முக்கியமான இறைத்தூதர்களை ‘ரசூல்மார்கள்’ என்பர். ‘ரசூல்லாஹ்’ என்பதற்கு இறைத்தூதர் என்று அர்த்தம்.)
தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர் இந்தத் தொடரை இருமுறை உச்சரிக்க வேண்டும். மேலும் தொழுகை தொடங்கும்போது ‘இகாமத்’ சொல்லப்படும். ‘இகாமத்’ என்பதற்கு ‘நிலை நாட்டல்’ என்பது பொருள். கூட்டுத் தொழுகை நடைபெறப் போவதாகச் செய்யப்படும் அறிவிப்பை இது குறிக்கும். இது பள்ளிவாசலுக்குள் இருப்பவர்களை கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்படும் அழைப்பாகும்.
இதிலும் நபிகளாரின் பெயர் இருமுறை இடம்பெறும். ஆக ஒருநாளில் ஒரு பள்ளிவாசலில் ஐவேளைத் தொழுகையின்போதும் நபிகளாரின் பெயர் இருபது முறை ஒலிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இதைக் கணக்கிட்டால் 4 கோடி முறை நபிகளாரின் திருப்பெயர் ஒலிக்கப்படுகிறது.
பொழுதுகளை அடிப்படையாகக் கொண்டது தொழுகை. நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், ஊருக்கு ஊர் தொழுகை நேரம் வேறுபடும். இதன் காரணமாக உலகளாவிய அளவில் எந்த நேரமும் ஏதாவது ஓர் இடத்தில் தொழுகை நடந்து கொண்டிருக்கும். இந்த வகையில் உலகம் முழுவதும் ஒரு நாளில் இரவு-பகல் என்றில்லாமல் எல்லா நேரமும் இடையறாது நபிகளாரின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்தப் பெருமை உலகில் வேறு எந்த மனிதருக்கும் இல்லை.