தேனி மாவட்டம் தேவதானப்பட்டி என்ற இடத்தில் உள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் ஆலயம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்திற்கு மூலவரோ, படங்களோ கிடையாது.
ஆலய கதவுக்குத்தான் பூஜை, வழிபாடு அனைத்தும் செய்யப்படுகிறது. கருவறையில் அம்மன் பெட்டி என்று ஒன்று உள்ளது. இந்தப் பெட்டிக்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே திருவிழாவின் போது வெளியே எடுத்து பூஜை நடத்தப்படும். மற்ற நாட்கள் அனைத்திலும், கருவறை கதவுக்கே வழிபாடு செய்யப்படுகிறது.
ஆற்றில் மிதந்து வந்த பெட்டியை, மூங்கிலைக் கொண்டு நிறுத்தியதால், இத்தல அம்மன் மூங்கிலணை காமாட்சியம்மன் என்று அழைக்கப்படுகிறார். அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு, காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.