விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவியர், பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மிக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய இரு மகன்கள் இருப்பதாகவும் அவை எடுத்துரைக்கின்றன.
ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் மற்றும் மகன்களுடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சந்தோஷி’ (சந்தோஷம்) என்று பெயரிட்டார். அவரே ‘சந்தோஷி மாதா’. அந்தக் குழந்தை பார்வதியின் சக்தியையும், லட்சுமிதேவியின் செல்வத்தையும், சரஸ்வதி தேவியின் கல்விச் சிறப்பையும் பெற்று திகழ்ந்தது.
வேண்டுபவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியவர், என்பதால் இந்த அன்னைக்கு ‘சந்தோஷி மாதா’ என்று பெயர் வந்தது. சந்தோஷி மாதா அவதரித்தது ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். எனவே ‘வெள்ளிக்கிழமையில் சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, விநாயகரின் அருளும் கிடைக்க வேண்டும்’ என்று நாரதர், விநாயகப் பெருமானிடம் வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.