சிரியாவின் நிலையை ட்வீட் செய்த ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே ஏற்பட்ட சண்டையில் இதுவரை லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் ஃபாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். வார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார்.
தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அலாபெத் மற்றும் அவரது தாயாரின் ட்விட்டரை சுமார் 211,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டதையும் அலாபெத் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததை தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் ட்விட்டரில் புதிய ஹேஷ் டேக் “WhereIsBana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.
பின் அலாபெத் செய்த ட்வீட்டில் “தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – ஃபாத்திமா.” என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர்.