இந்தியாவிலேயே ஐபோன்களை தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி இருப்பதாக அந்நிறுவனம் சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் உலகின் அதிகளவு மொபைல் போன் பயன்படுத்துவோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சாதனங்களின் தயாரிப்பு ஆலைகளை இந்தியாவில் அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்களது தயாரிப்பு ஆலைகளை நிறுவ மத்திய அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை நிறுவ மத்திய அரசு முறையான நிதியுதவி வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பு ஆலைகளை இந்தியாவிலேயே நிறுவும் பட்சத்தில் ஐபோன்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்தியாவில் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும் பட்சத்தில் நேரடி ஆப்பிள் விற்பனை மையங்களும் துவங்கப்படும். இதில் இந்திய சந்தையில் தற்சமயம் கிடைப்பதை விட 2 சதவிகிதம் குறைவான விலையில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை செய்யப்படும்.
சர்வதேச சந்தையில் ஆப்பிள் சாதனங்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் தென் மாநிலங்களிலும் தனது தயாரிப்பு ஆலைகளை இயக்கி வருகின்றது. இங்கு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.