பறிமுதல் செய்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தது. “கடல் மிதவை” எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கப்பல் நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆய்வில் ஈடுபட்டு இருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கியை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நீர்முழ்கி கப்பல் சீனாவால் பறிமுதல் செய்யப்பட்டது முதல் கடந்த சில தினங்களாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தும், அதனை சீன கடற்படையினர் பறிமுதல் செய்ததற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்ட்டகன்’ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இதனையடுத்து, கப்பல்களின் பாதுகாப்பு கருதியே அமெரிக்காவின் நீர் மூழ்கியை பறிமுதல் செய்ததாக விளக்கம் அளித்த சீனா, உரிய நடைமுறைக்குப் பிறகு கப்பலை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தது.

ஆனால், சீனாவின் இந்த செய்திக்கு உடனடியாக பதிலடி கொடுத்த டிரம்ப், “திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவிக்க, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. நீர்மூழ்கியை திருடியதாக கூறிய டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.

பின்னர் ஒருவழியாக அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை முடிந்து, அந்த நீர்மூழ்கியை சீனா இன்று திருப்பி கொடுத்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா தரப்பு நட்பு ரீதியிலான ஆலோசனைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கருவியை தென்சீனக் கடலில் இன்று நண்பகல் ஒப்படைத்ததாக சீன பாதுகாப்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. சீனா தரப்பில் இருந்து ஆளில்லா நீர்மூழ்கி ஒப்படைக்கப்பட்டதை பென்ட்டகனும் உறுதி செய்துள்ளது.