ரணிலின் கனவு நனவாக இடமளியோம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு நனவாக மஹிந்த அணி இடமளிக்காது என அதன் ஏற்பாட்டாளரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட, வெல்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்துக்கு வருவதற்காக ரணில் விக்கிரமசிங்க அன்று முதல் கனவு காண்கிறார். நல்ல வழியிலோ அல்லது தீய வழியிலோ அதிகாரத்தை பெற்றுக்கொள்வது அவரது கொள்கையாகும்.

இப்போது சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட அமைச்சராக கனவு காண்கிறார்.

அரசியல் அமைப்பை மாற்றி சிறப்பு பிரதமராக ஆகும்வரை பொறுமையாக இருக்காது, ஜனாதிபதிக்கு மேலே இருக்கும் சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட அமைச்சராக மாற நடவடிக்கை எடுக்கும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய நாம் பிரதமரின் கனவு நனவாக இடமளிக்க மாட்டோம் என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.